கோவை: நடப்பாண்டு காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஏப்ரல் 30-ம் தேதி தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் காற்றாலை மின் உற்பத்தி சீசன்ஏப்ரலில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும். கோடை வெயிலின்தாக்கத்தால் தமிழகத்தில் தினசரிமின் நுகர்வு 21 ஆயிரம் மெகாவாட்டை நெருங்கி வருகிறது. இதனால், மின்தடை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், காற்றாலை மின்உற்பத்தி சீசன் தொடங்கி உள்ளதால், வரும் நாட்களில் அதிகரிக்கும் மின் தேவையைப் பூர்த்திசெய்ய, காற்றாலை மின்உற்பத்தி உதவும் என்று தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கஸ்தூரி ரங்கையன் இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்திக் கட்டமைப்பு 8,500 மெகாவாட் ஆகும். நடப்பாண்டு காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஏப். 30-ம் தேதி தொடங்கியது. மே 1-ம் தேதி காலை 8 மணி வரை மொத்தம் 14.26 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. மே 1-ம் தேதி முதல் மே 2 (நேற்று) காலை 8 மணி வரை 21.99 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சீசன் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், வெயிலின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் அதிகரிக்கும் தினசரி மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை மின்சாரம் முக்கியப் பங்கு வகிக்கும். ஆண்டுதோறும் 6 அல்லது 7 மாதங்கள் மட்டுமே காற்றாலை சீசன் உள்ள நிலையில், சீசன் நிறைவடைந்த பின் மின் உற்பத்தி குறையும். மொத்த மின் உற்பத்தி நிதியாண்டு அடிப்படையில் கணக்கிடப்படும். இதன்படி, கடந்த 2022ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2023 மார்ச் 31-ம் தேதி வரை 12,509 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அதேபோல, கடந்த நிதியாண்டில் 12,766 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டும் 12 ஆயிரம் மில்லியன் யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்குப் பருவக் காற்றுகாலம் தொடங்கி உள்ளதால், அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் தாக்கம் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0