சென்னை: திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்ட அறிக்கை: தந்தை பெரியாரின் மனக்குறையைப் போக்கும் வகையில்தான் கலைஞர் பல்வேறு திட்டங்களை பெண்களின் மேன்மைக்காக உருவாக்கி சட்டங்களை இயற்றினார்.
இன்று மக்களின் மனம் கவர்ந்த முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின், பெண்களுக்காக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு என்பதை சட்டமாக்கி, 11 பெண்களை மேயர்களாக்கி, பல பெண்களை நகராட்சி தலைவர்களாக அமர வைத்து சாதனை புரிந்திருக்கிறார்.
எனவே மார்ச் 8ம் தேதி(நாளை) மாலை 5 மணிக்கு, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மகளிர் அணியினர் நடத்தும் மகளிர் தின விழாவிற்கு அவர் தலைமையேற்பது மிகப் பொருத்தமானதாக உள்ளது. அதே போன்று கேரள அரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா சிறப்புரை நிகழ்த்துகிறார். நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் தொண்டாற்றி வரும் எத்திராஜ் கல்லூரி தலைவர் சந்திராதேவி தணிகாசலம், தாசீம் பீவி கல்லூரி முதல்வர் சுமையா தாவூத்தும் வாழ்த்துரை வழங்குகிறார்கள். அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகிக்கிறார். மகளிர் ஆணையத் தலைவர் குமரி விஜயகுமார் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். விழாவில் திமுக மகளிர் மட்டுமின்றி அனைத்து மகளிரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.