கோவை மாநகரில் நெரிசலை தவிர்க்க முதல்கட்டமாக திட்டச்சாலைகள் ஏற்படுத்த முடிவு

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான இடங்களில் திட்ட சாலைகள் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகரின் முக்கிய இடங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புதிய திட்ட சாலைகள் ஏற்படுத்த மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டு, கருத்துரு தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ”நகரின் சீரான போக்குவரத்துக்கு திட்ட சாலைகள் அவசியம். கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் திட்ட சாலைகள் ஏற்படுத்த வேண்டி தொடர்ந்து மாநகராட்சிக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிங்கா நல்லூரை மையப்படுத்தி இரு திட்ட சாலைகள், கோவைப்புதூர், விளாங்குறிச்சி, வடவள்ளி, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி ஆகிய பகுதிகளை மையப்படுத்தி 7 திட்ட சாலைகள் ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதை தீவிரப்படுத்த வேண்டும்” என்றனர். இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ”பி.என்.புதூர் அருகேயுள்ள ஐஸ்வர்யா நகர் முதல் மருதமலை சாலை வரை 624 மீட்டர் தூரத்துக்கு 30 அடி அகல திட்ட சாலை, சரவணம்பட்டியிலிருந்து துடியலூர் பிரதான சாலை முதல் மீனாட்சி நகர் வழியாக அண்ணா நகர் வரை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 60 அடி அகல திட்ட சாலை, சின்னவேடம்பட்டி அருகே சரவணம்பட்டி – துடியலூர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 600 மீட்டர் தூர தென்வடல் திட்ட சாலை, பன்மால் முதல் செளரிபாளையம் சாலை வரை 114 மீட்டர் தூரத்துக்கு 40 அடி திட்ட சாலை, சிங்காநல்லூரின் மற்றொரு பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 40 அடி திட்ட சாலை, பாலக்காடு சாலை – கோவைப்புதூர் சாலையில் 1.45 கிலோ மீட்டர் தூரத்துக்கு 60 அடி திட்ட சாலை, விளாங்குறிச்சியிலிருந்து – கொடிசியா சாலை வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு 80 அடி மற்றும் 60 அடிகளில் இருவித திட்ட சாலை என 7 திட்ட சாலைகளுக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு ரூ.111 கோடி நிதி கேட்டு நகர் ஊரமைப்புத் துறைக்கு கடந்தாண்டு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், முதல் கட்டமாக, ரூ.12 கோடி மதிப்பில் ஐஸ்வர்யா நகர் – மருதமலை சாலை, ரூ.4 கோடி மதிப்பில் துடியலூர் பிரதான சாலை முதல் மீனாட்சி நகர் வழியாக அண்ணா நகர் வரை, ரூ.3 கோடி மதிப்பில் தென்வடல் திட்ட சாலை ஆகிய திட்டசாலைகளுக்கு நிதி கேட்டு நகர் ஊரமைப்புத் துறைக்கு 3 மாதங்களுக்கு முன்னர் இறுதி கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில், அண்ணா நகர் திட்ட சாலைக்கு ஐந்தரை ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. கையகப்படுத்தப்பட வேண்டியது 1.8 ஏக்கராகும். தென்வடல் திட்ட சாலைக்கு 5 ஏக்கர் தேவைப்படுகிறது. இதற்காக ஒன்றரை ஏக்கர் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது,” என்றார். இது குறித்து நகர் ஊரமைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ”மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், 3 திட்ட சாலைகள் தொடர்பான கருத்துரு நிதி கேட்டு எங்களது அலுவலகத்தில் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. அதில் ஏற்பட்ட சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அங்கிருந்து ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.