கடும் வெயில் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நண்பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதிலும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டும் செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் அதிமுக தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.மக்கள் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்தவர் தான் எம்ஜிஆர். அதிமுக ஓர் ஆலமரம், ஆயிரம் காலத்துப் பயிர். இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடப்போகும் நல்லியக்கம் என ஜெயலலிதா சூளுரைத்து, அதன்படி கட்சி பணிகளையும், மக்கள் பணிகளையும், அனைவரும் பாராட்டும் வகையில் ஆற்றினார்கள். இருபெரும் தலைவர்களின் வழியில், உங்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு அதிமுக மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றி வருகிறது” என்று தெரிவித்துள்ளார். மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம் என்று சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, தற்போது, எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு அதிமுக நிர்வாகிகளும், கட்சியினரும் தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து வரும் 25ஆம் தேதி வியாழக் கிழமை காலை முதல் மக்களின் தாகத்தைத் தணிக்கும் அறப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், “இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும். பொது மக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் அமைக்கப்படும் தண்ணீர் பந்தல்களை நிர்வாகிகள், காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடும் இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்திட வேண்டும்” என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0