திருச்சியில் பேருந்து ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வெளியூா்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவா்கள் வாக்களித்து விட்டு தொடா்ந்து இரு நாள் விடுமுறைக்குப் பின்னா் அவரவா் பணி செய்யும் ஊா்களுக்குப் புறப்பட்டனா். இதனையொட்டி திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்கள், ஜங்ஷன், ஶ்ரீரங்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை பயணிகளின் கூட்டம் அலைமோதியது. காலை திருச்சியில் இருந்து புறப்பட்ட பல்லவன் விரைவு ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணிகள் ஏறியதால், ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் வந்ததும் முன்பதிவில் இருந்த பயணிகள் மாற்று பெட்டிக்கு அனுப்பப்பட்டனர்.தேர்தல் விடுமுறை, கோடை விடுமுறையால் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. பயனிகளுக்கு கொடுக்கப்படும் பயணச் சீட்டுகளுக்கு ஏற்ப கூடுதல் பெட்டிகளை இணைக்காமல் பயணச்சீட்டு வழங்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பயணிகள் கூக்குரல் இட்டனர். இதனால் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்வதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கடும் வெயிலின் தாக்கம் ஒழுக்கம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.