அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை வைக்க சொன்னா,இபிஎஸ் அவரு பொண்டாட்டி சிலையை வச்சிட்டாரு: நடிகர் செந்தில்

எடப்பாடி யார் யாரை ஏமாற்றினார் என்பது உங்களுக்கு தெரியுமா? சசிகலா காலில் விழுந்து கையில் விழுந்து இப்போ நீ யார் என்று கேட்கின்றார் என நடிகர் செந்தில் விமர்சனம் செய்துள்ளார். புதுச்சேரி மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து நடிகர் செந்தில் வில்லியனூர், மங்கலம் உள்ளிட்ட தொகுதிகளில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐஜி சந்திரனுடன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்: மோடி என்னென்ன திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்துள்ளார்கள் என எல்லாம் உங்களுக்கு தெரியும். மற்ற மருந்துகடைகளில் மருந்து வாங்கினால் 100 ரூபாய் ஐயா மோடி கடையில் வாங்கினால் ரூ.20 தான். எல்லோருக்கும் இலவச அரிசி போடப்படுகின்றது என்று பேசும்போது கூட்டத்தில் இருந்த பொதுமக்களில் சிலர் எங்களுக்கு கேஸ் சிலிண்டர் வரவில்லை என சொல்ல, அம்மா எல்லோருக்கும் ஒரே நேரத்திலா வரும் கொஞ்ச கொஞ்சமாத்தான் வரும் வந்துரும் கண்டிப்பாக வந்துடும் என்றார். தமிழகத்தை விட அதிக சலுகைகள் புதுச்சேரியில் தான் கிடைக்கின்றன. புதுச்சேரியில் பெண் குழந்தைகள் பிறந்தால் 50 ஆயிரம் வைப்பு நிதி வழங்கப்படுகின்றது. இது தமிழகத்தில் இல்லை அம்மா இருக்கும் போது இருந்தது அதையும் எடுத்து விட்டார்கள். ரங்கசாமி ஐயா சின்ன காமராஜர் என்றவர், நான் அம்மா (ஜெயலலிதா) கட்சியில் இருந்தேன் உங்களுக்கு தெரியும். ஆனால் எடப்பாடிக்கு திமிர் வந்து விட்டது ஏனென்றால் காசு வந்துடுச்சு கொள்ளை அடித்து அதை வைத்துக்கொண்டு இப்போ திமிர்தனம் செய்கின்றார். எங்களை போன்ற தொண்டர்கள் எல்லாம் வேண்டாமாம், அம்மா சேவல் சின்னத்தில் நிற்கும்போதிலிருந்து நான் இருக்கின்றேன். அப்போது எடப்பாடி வரவில்லை, அதன் பிறகு தான் வந்தார். அவருக்கு அடித்த லக்கு என்ன செய்றது, அம்மா மறைவிற்கு பின்பு நல்ல கட்சி எதுவென்று பார்த்து மோடி கட்சிக்கு வந்தேன் என்றார். ஜெயலலிதாவிற்கு கட்சி அலுவலகத்தில் வைக்க சிலை செய்ய சொன்னால் அவரது மனைவி சிலையை செய்து வைத்து விட்டார். எடப்பாடி யார் யாரை ஏமாற்றினார் என்பது உங்களுக்கு தெரியுமா? சசிகலா காலில் விழுந்து கையில் விழுந்து இப்போ நீ யார் என்று கேட்கின்றார். ஏமாற்று பேர்வழி என குற்றம்சாட்டினார். நானூரும் நாம்தான், நாற்பதும் நமது தான். ஆகவே பாஜகவில் போட்டியிடும் நமச்சிவாயத்திற்கு தாமரைக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என செந்தில் கேட்டுக்கொண்டார்.