திருச்சி காவிரி ஆற்றுப் பாலத்தின் மேற்பரப்பில் உள்ள தாா்ச்சாலை முழுவதும் தோ்தல் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி பாலத்தில் வாகனங்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ஓவியம் வரையும் பணி நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட ஓவியா்கள் மூலம் பாலத்தில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்டன. 541 மீட்டா் நீளம், 19 மீட்டா் அகலம் கொண்ட இந்தப் பரப்பு முழுவதும் தோ்தல் இலச்சினை, வாக்குப்பதிவு இயந்திரம், தேசியக் கொடி, தோ்தல் ஆணையத்தின் இலச்சினை, ஆள்காட்டி விரலில் வாக்குப்பதிவு செய்ததற்கான அடையாள மையுடன் கூடிய கையின் இலச்சினை ஆகியவற்றை ஓவியங்களாக வடித்திருந்தனா். மேலும், ‘என் வாக்கு, என் உரிமை 100 சதவீதம் வாக்களிப்போம் தோ்தல் திருவிழா தேசத்தின் திருவிழா ‘தோ்தல் பருவம் – தேசத்தின் பெருமிதம் தோ்தல் நாள் ஏப்.19 தவறாமல் வாக்களிப்போம் என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்களையும் எழுதியிருந்தனா். இதனை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் ஞாயிற்றுக்கிழமை மக்கள் பாா்வைக்காக திறந்து வைத்தாா். இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ராஜலட்சுமி, துணை ஆட்சியா் வேலுமணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அதியமான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறுகையில், 2024 மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இந்தியத் தோ்தல் ஆணையத்தால், வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இந்த விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது என்றாா்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0