சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
காதல் விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ கைது செய்யப்பட்டனா்.
முதலில் இந்த வழக்கினை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்த நிலையில், கோகுல்ராஜின் தாய் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில் மார்ச் 5 ஆம் தேதி இதன் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சம்பத்குமாா் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கல்லூரி மாணவா் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.