நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருச்சியில் யாருக்கு வெற்றி அதனாலேயே வருகின்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து முடிவுகளையும் திராவிட கட்சிகள் திருச்சி மையமாக வைத்து எடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் வி.இளங்கோவன் 1,61,999 வாக்குகளும், அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் 1,00,818 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வி.வினோத் 65,286 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்தின் வி.ஆனந்தராஜா 42,134 வாக்குகளும் பெற்றனர். இந்த தேர்தலில் திருநாவுக்கரசர் 4,59,286 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், இந்த முறை திருச்சி தொகுதியில் மீண்டும் தனக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் நம்பியிருந்த திருநாவுக்கரசருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, பாஜகவும் தனது கூட்டணிக் கட்சியான அமமுகவுக்கு வாய்ப்பளித்துள்ளது. திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றிய தகவல் மேலும், அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். திருச்சிக்கு இவர் புதியவர் என்றாலும், தங்களுக்கு இங்கு ஓரளவு தொண்டர்கள் பலம் உள்ளது என மதிமுக நம்புவதால், திமுகவிடம் இந்தத் தொகுதியை கேட்டுப் பெற்று, இங்கு துரை வைகோவை அக்கட்சி களமிறக்கியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் தேர்தலில் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. அதிமுக சார்பில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ப.கருப்பையா என்பவரை முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கரின் சிபாரிசின் பேரில் அதிமுக தலைமை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் மணல் ஒப்பந்ததாரர் கரிகாலனின் சகோதரர் ஆவார். தேர்தல் அரசியலுக்கு மதிமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் புதியவர்கள் என்றாலும், தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தெம்பில் களத்தில் இறங்கியுள்ளனர். பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் மாநகராட்சி கவுன்சிலராக இருந்த ப.செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராஜேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும், அதுதொடர்பான சட்டப் போராட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்தவர். ஜல்லிக்கட்டுப் பேரவையின் இளைஞரணி மாநில செயலாளராகவும் உள்ளார்.திருச்சியில் நான்கு முனை போட்டி திருச்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர், மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றிக்கு தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். இது சமூக ஊடகத்தின் காலம். எந்த சின்னத்தையும் 24 மணிநேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதால் சின்னம் ஒரு பிரச்சினை இல்லை என நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றி வருகிறார் மதிமுக வேட்பாளர் துரை வைகோ. இதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி, முன்னாள் எம்.பி. ப.குமார், மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் ஆகியோரும் தங்களது பிரச்சார வியூகங்களின் மூலம் இந்த முறை மலைக்கோட்டையை அதிமுகவின் வசமாக்குவது என்ற ரீதியில் தங்களது தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.2019-ம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்ற நிலையில், இந்த முறை பாஜக கூட்டணியில் களம் இறங்கியுள்ளதால், வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளதாக அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் நம்பிக்கையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கூட்டணியின்றி தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜேஷ், தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதால் திருச்சி தொகுதியில் நான்குமுனை போட்டி நிலவுகிறது.
திருச்சி வருகின்ற தேர்தலில் யாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்
அரசியலில் திருச்சி திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. அதனால்தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் திருச்சியில் இருந்தே தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர். திருச்சி யாருக்கு திருப்புமுனையை தந்திருக்கிறது என்பது வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவந்துவிடும்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் 1951-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஒரு இடைத் தேர்தல் உட்பட 18 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில், அனந்த நம்பியார் (1962, 1967), மீ.கல்யாணசுந்தரம் (1971,1977) ரங்கராஜன் குமாரமங்கலம் (1998,1999), தலித் எழில்மலை (2001 இடைத்தேர்தல்), எல்.கணேசன் (2004), ப.குமார் (2009, 2014), திருநாவுக்கரசர் (2019) ஆகியோர் வெளிமாவட்டத்தில் இருந்து திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். உள்ளூரைச் சேர்ந்த வேட்பாளர்கள் மக்களவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0