திருச்சி மலைக்கோட்டை வாசலில் பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர் கருப்பையா

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மலைக்கோட்டை கோவிலில் விநாயகரை வணங்கி பிரச்சாரத்தை துவக்கினார் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 சட்டமன்ற தொகுதிகளில், முதல் கட்டமாக வருகிற 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வெற்றி வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகின்றார். கடந்த சில நாட்களாக திருச்சி, புதுக்கோட்டை மாநகரில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில், கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி தனது பிரச்சாரத்தை துவக்கினார். அதனைத் தொடர்ந்து என்.எஸ்.பி ரோடு, நத்தர்ஷா பள்ளிவாசல், மன்னார்புரம் உள்ளிட்ட 81 பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக, மலைக்கோட்டை வாயிலில், அணிச் செயலாளர்கள் கார்த்திகேயன், இப்ராம்ஷா, அரவிந்தன் உள்ளிட்டோர் வேட்பாளருக்கு ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி குமார், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, மனோகரன், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.