புதுடெல்லி: ‘தமிழ்நாட்டில் போட்டியிடுகிறீர்களா என கேட்டார்கள். ஆனால் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டேன்’ என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் இம்முறை பாஜ முக்கிய தலைவர்களை வேட்பாளர்களாக களமிறக்கி உள்ளது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் பல இடங்களில் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர்களை மக்களவை தேர்தலில் களமிறக்கி உள்ளது. மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல், பூபேந்தர் யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா போன்ற மாநிலங்களவை எம்பிக்கள் இம்முறை மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். இந்நிலையில், மக்களவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். இதுதொடர்பாக ஆங்கில செய்தி டிவி சேனல் டைம்ஸ் நவ் மாநாட்டில் பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இம்முறை தமிழ்நாட்டிலோ அல்லது ஆந்திராவிலோ போட்டியிட விருப்பம் இருக்கிறதா என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என்னிடம் கேட்டார். 10 நாட்கள் யோசித்துவிட்டு பதில் சொல்கிறேன் என கூறினேன். அதே போல 10 நாட்களுக்குப் பிறகு சென்று, போட்டியிடவில்லை என்றேன். ஏனென்றால் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. அதுமட்டுமின்றி, ஆந்திராவாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி இரண்டிலும் எனக்கு ஒரு பிரச்னை உள்ளது. வெற்றி பெறும் திறனுக்கு பல்வேறு அளவுகோல்களை கேட்பார்கள். நீங்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவரா அல்லது அந்த மதத்தைச் சேர்ந்தவரா? நீங்க இதைச் சேர்ந்தவரா? என கேட்பார்கள். அதனால் என்னால் அதெல்லாம் முடியும் என நினைக்கவில்லை. எனவே நான் வேண்டாம் என்று சொன்னேன். எனது விருப்பத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கு நான் மிகுந்த நன்றி தெரிவிக்கிறேன். ஆகவே நான் தேர்தலில் போட்டியிடவில்லை.இவ்வாறு கூறினார். மத்திய அமைச்சராக உள்ள உங்களிடமே தேர்தலில் போட்டியிட பணமில்லையா என கேட்கப்பட்டதற்கு, ”எனது சம்பளம், எனது வருமானம், எனது சேமிப்பு ஆகியவை தான் என்னுடையது. நாட்டின் வருவாய் ஒன்றும் என்னுடைய பணமல்ல” என்றார். மேலும், பல்வேறு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருப்பதாகவும் நிர்மலா கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0