திமுக அழிப்பதாக சவால்விட்டு காணாமல் போனவர்கள் வரிசையில் பிரதமர் மோடியும் இணைவார் – டி.ஆர்.பாலு பதிலடி.!!

திமுகவை அழிப்பதாக சவால்விட்டு காணாமல் போனவர்கள் வரிசையில் பிரதமர் மோடியும் இணையப்போவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை வைத்து, பிரதமர் மோடி ஓட்டு வாங்க நினைப்பதாகவும், சொந்த சரக்கு இல்லாமல் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், மோடியா, லேடியா என கேட்ட ஜெயலலிதாவை மோடி புகழ்வதை என்னவென சொல்வது எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார். ஒரே ஒரு எய்ம்ஸ் கூட திறக்க முடியாமல் மதுரைக்கு வருவதற்கு கூச்சமாக இல்லையா எனவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிவாரண நிதி ஒரு பைசா கூட தராமல் எப்படி வருகிறீர்கள் எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகனை மத்திய இணை அமைச்சர் பொறுப்பில் நியமித்துவிட்டு, பெருமை அடிக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ள அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கேபினட் அமைச்சர்களாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் நியமிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். திமுகவை அழிப்பதாக சவால்விட்டு காணாமல் போனவர்கள் வரிசையில் பிரதமர் மோடியும் விரைவில் இணைந்துவிடப் போவதாகவும் டி.ஆர்.பாலு எச்சரித்துள்ளார்.