சென்னை: ‘கேரளா, தமிழகம் இடையே நீண்ட கால உறவு தொடர்கிறது’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள தன் வரலாற்று நுாலான, ‘உங்களில் ஒருவன்’ முதல் பாகம் வெளியீட்டு விழா, நேற்று சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், நுாலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: தமிழக மக்களும், கேரள மக்களும், இந்த மண்ணின் மைந்தர்கள். கேரளா, தமிழகம் இடையே நீண்ட கால உறவு தொடர்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, திராவிடர் இயக்கம் போராடியது.
பன்முகத்தன்மை, கூட்டாட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில், நாம் ஒன்றிணைந்து நிற்கிறோம். நம்மை பிரிக்கிற சக்திகளுக்கு எதிராக, நாம் இணைந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்பீஹார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில் ‘தமிழகத்தின் சமூக நீதி இயக்கத்தின் மீது மிகவும் ஈர்ப்பு கொண்ட, என் தந்தை லாலு பிரசாத் யாதவ், பீஹாரிலும் அதை செயல்படுத்தினார். தமிழகத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கொள்கைகள், இந்தியா முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. திராவிட அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஒவ்வொருவரையும் பெருமைப்பட வைக்கிறது. தற்போது அரசியலமைப்பு சட்டம், சமூக நீதி மீது தாக்குதல் நடக்கிறது. இதை தடுக்க வேண்டும்’ என்றார்.