கோவை மாவட்டம் இருகூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட மக்கள் சுமார் 244 பேருக்கு கடந்த 2001 ஆம் வருடம் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இலவச வீட்டு மனை வழங்கப்பட்ட இடம் தங்களுக்கு சொந்தம் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து கொண்டே இருந்தனர். ஆனால் இவற்றையெல்லாம் இருகூர் ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் இணைந்து 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறு நீதிமன்றங்களில் இருந்த வழக்கை முடித்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு கொடுத்த வீட்டுமனை பட்டாக்கள் உரிய இடம் அவர்களுடையதுதான் என்று நிரூபித்தனர்.
கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளர்களின் பட்டியலை கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல தாசில்தார் மாலதி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, வருவாய் ஆய்வாளர் முருகன், சர்வேயர் கணேசன் ஆகியோர் தலைமையிலான குழு இருகூர் சமுதாய நலக்கூடத்தில் பயனாளர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர். விரைவில் அவர்களுக்குரிய இடத்தை மீட்டுக் கொடுத்து அதில் அவர்களை குடியேற வைப்பதே எங்களுடைய நோக்கம் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் யூ கே சிவஞானம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன், இருகூர் பேரூராட்சி 8வது வார்டு உறுப்பினர் ஸ்டாலின் குமார், வழக்கறிஞர் ராமர், இருகூர் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சி ஐ டி யு தலைவர் விஜயராகவன், dyfi செயலாளர் பிரகாஷ், குரு சாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு உதவி செய்தனர். விரைவில் தங்களுக்குரிய கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.