கோவை:கோவைக்கு மேற்கே தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அங்குள்ள கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள 6 மலைகளை பக்தர்கள் மூங்கில் தடி உதவியுடன் கடந்து சென்று 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி உள்ள கிரிமலை ஆண்டவரை தரிசிக்கின்றனர். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை 1-ந்தேதி ஆகிய விசேஷ காலங்களில் கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசித்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு மலையேற தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது குறைந்து வருவதாலும்,அரசு சார்பில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த காரணத்தாலும் இன்று மகா சிவராத்திரி என்பதால் நேற்று காலை முதலே பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில் அடிவாரத்திலிருந்து மலையேற தொடங்கினர்.மேலும் கடந்த ஓரிரு நாட்களாக மலையேறும் பக்தர்களிடம் வனத்துறையினர் கட்டணமாக ரூ 100 வசூலித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை மலையேறிய மக்களிடம் பணம் வசூலிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த பகுதியில் வனத்துறையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0