பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்: கடல்கொள்ளை, கடத்தல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது…

புதுடெல்லி: கடல்கொள்ளைகள் மற்றும் கடத்தல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார். இந்தியாவின் முதல் ஆய்வு கப்பல்( சர்வே வெசல் லார்ஜ்)ஐஎன்எஸ் சந்தாயக் விசாகப்பட்டினம், கடற்படை கப்பல் தளத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் கடற்படையில் இணைக்கப்பட்டது. விழாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,” இந்தியப் பெருங்கடலை உலகளாவிய வர்த்தகத்திற்கான ஹாட்ஸ்பாட் என அழைக்கின்றனர். ஏடன் வளைகுடா வழியே பெரிய அளவிலான சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது. கடற்கொள்ளையர்களிடமிருந்து பல அச்சுறுத்தல்கள் உள்ளன. கடலில் வணிகக் கப்பல்களைக் கடத்தும் முயற்சிகள், கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை மீட்பதில் இந்திய கடற்படை அதிரடி செயல்களை மேற்கொண்டது.

கடற்கொள்ளையர்கள், கடத்தலில் ஈடுபடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது புதிய இந்தியாவின் உறுதிமொழி. இந்தியக் கப்பல்களுக்கு மட்டுமல்ல, நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கியதற்காக இந்திய கடற்படையை பாராட்டுகிறேன். சமீபத்தில் ஏடன் வளைகுடாவில் ஒரு பிரிட்டிஷ் கப்பலின் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் டேங்கர்கள் தீப்பிடித்தது. இந்திய கடற்படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்தியாவின் இந்த முயற்சி உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்றார்.