டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், பாஜகவின் பலவீனம் என்ன.. மோடிக்குப் பிறகு பாஜகவில் யார் என்பது குறித்த கேள்விகளுக்குப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பதிலளித்துள்ளார். நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் கூட்டணி தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன.
ஒரு பக்கம் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. மற்றொரு புறம் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
பிரசாந்த் கிஷோர்: வரும் காலங்களில் தேர்தல் சார்ந்த நடவடிக்கைகள் அரசியல் கட்சிகள் மேலும் தீவிரமாக மேற்கொள்ளும் என்று தெரிகிறது. தற்போதைய சூழலில் பாஜகவுக்குச் சாதகமான சூழல் இருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதற்கிடையே லோக்சபா தேர்தல் குறித்தும் பாஜகவுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக என்ன இருக்கும் என்பது குறித்தும் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமே அதிகம் சார்ந்து இருப்பதே பாஜகவுக்குப் பெரிய ஆபத்து என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். பிரபல ஆங்கில ஊடகம் சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர் பல முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசியிருந்தார்.
பெரிய பிரச்சினை: இது தொடர்பாக அவர் கூறுகையில், “பிரதமர் மோடியை அதிகமாகச் சார்ந்திருப்பதுதான் இப்போது பாஜகவின் மிகப் பெரிய பிரச்சனை.. தற்போதைய சூழலில் பிரதமர் மோடிக்காக மட்டுமே பாஜகவுக்கு வாக்குகள் வருகிறது. அவரை சுற்றியே இங்கு அரசியல் இருக்கிறது. இப்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டியுள்ளார்கள். அது பெரிய விஷயம் தான்.. ஆனால், நீங்கள் பிரதமர் மோடியை நீக்கிவிட்டுப் பார்த்தால் பாஜகவால் இந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இதை பாஜகவே ஒப்புக்கொள்ளும்” என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு பிறகு பாஜக எந்த தலைவரை முன்னிறுத்தும் என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரசாந்த் கிஷோர், “அது குறித்து எனக்குத் தெரியாது, ஆனால் அது யாராக இருந்தாலும், அவரை விட (லவதுசாரி சித்தாந்தத்தில்) கடுமையான நபராகவே இருப்பார் இருப்பார்… அவரை பார்க்கும் போது மோடி ஒப்பீட்டளவில் தாராள வாதியைப் போல நமக்குத் தெரியும்” என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள்: தொடர்ந்து காங்கிரஸ் குறித்தும் இந்தியா கூட்டணி குறித்தும் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி தங்களை மீட்டுருவாக்கம் செய்தே ஆக வேண்டும்.. அரசியலில் நீங்கள் இலக்கை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. நீண்ட கால திட்டம் தேவை.. இன்று ரஃபேல், நாளை இந்துத்துவா என்று மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டிருந்தால் அது எடுபடாது.. ஒரே விஷயத்தைக் கையில் எடுத்து அது தீவிரமாக அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
அடுத்து இந்தியா கூட்டணி குறித்துப் பேசினோம் என்றால் அவர்கள் சீரியஸாக இருப்பது போலவே தெரியவில்லை.. முதலில் அவர்கள் கடந்த ஜூன் மாதம் சந்தித்தார்கள். அதன் பிறகு தங்களுக்குள் தான் மீட்டிங் நடத்தினார்கள். பொதுமக்களை மக்களைச் சந்திக்கவே இல்லை. இது எதிர்க்கட்சிகள் சீரியஸாக இல்லை என்பதைக் காட்டுகிறது. மேலும், லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதைக் கவனிக்காமல் ராகுல் காந்தி யாத்திரை போகிறார்.. இப்படி எல்லாம் செய்யுங்கள் என அவருக்கு யார் சொல்கிறார் என்றே தெரியவில்லை” என்றார்.