ஜெயலலிதாவுக்கு ஜோசியம் பார்த்த ஜோசியரை விஜய்யை வழி நடத்துகிறார் …

ம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், கருணாஸ், கமலஹாசன் ஆகியோர் வரிசையில் நடிகர் விஜய்யும் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். நேற்று (பிப்ரவரி 2) தனது கட்சி பெயரை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் வாயிலாக அறிவித்தார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், ‘கட்சி பெயரிலேயே தவறு இருக்கிறது. இந்த பிழையையே சரி செய்யாதவர். சமூகத்தில் இருக்கும் பிழையை எப்படி சரி செய்வார்’ என தமிழக அரசியல் அரங்கில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால், காரணமாகத்தான் விஜய் இப்படி பெயர் வைத்த்திருக்கிறார் என்றும் இதன் பின்னணியில் ஒரு ஜோசியர் இருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்க வட்டாரங்கள் கூறுகின்றன. “இயேசுவை வணங்கினாலும், சாமியார்கள் குறி சொல்வதையும், ஜோசியத்தையும் நம்பக்கூடியவர் விஜய். விஜய்யின் பலவீனத்தை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், போயஸ் கார்டனில் ஜோசியம் பார்த்து வந்த கடலூர் சந்திரசேகரை விஜய்க்கு அறிமுகப்படுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது போயஸ் கார்டன் சென்று அவருக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கியவர் சந்திரசேகர். ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல சசிகலா, டிடிவி தினகரன், ரஜினிகாந்த், அஜித்குமார் என அரசியல், திரை பிரபலங்களுக்கும் ஜோசியம் பார்த்திருக்கிறார்.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா குடும்பத்தை குறிவைத்து ஐடி ரெய்டு நடந்தது. அப்போது ஜோசியர் சந்திரசேகர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இப்படி அரசியல் பின்னணி கொண்ட ஜோசியரை அழைத்து போய் பனையூர் பங்களாவில் விஜய்யை சந்திக்க வைத்தார் புஸ்ஸி ஆனந்த். சந்திரசேகரின் ஜோசியமும் கணிப்பும் சரியாக இருந்ததால் நடிகர் விஜய்க்கு ஜோசியர் மீது நம்பிக்கை அதிகமானது. விஜய் எதாவது தொடங்கவேண்டும் என்றால் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள சந்திரசேகர் ஜோசியர் வீட்டுக்கு கார் அனுப்பி வைப்பார், அந்த காரில் ஏறி ஈசிஆர் சாலையில் உள்ள விஜய்யின் பனையூர் பங்களாவுக்கு சென்று ஜோசியம் சொல்லிட்டு வருவார் சந்திரசேகர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்க திட்டமிட்டபோது இந்த ஜோசியர் வேண்டாம் என்று விஜய்க்கு தடைபோட்டார். கடந்த ஆண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு விஜய்யை அழைத்துச் சென்று அர்ச்சனை செய்துவிட்டு வந்தார்.

அரசியலில் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இப்போது இல்லை. இவர்களின் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப சரியான நேரம் இதுதான். அதனால் இப்போதே கட்சி தொடங்கிவிடலாம் என்று நாள் நட்சத்திரம் பார்த்து தை வெள்ளிக் கிழமை பிப்ரவரி 2 ஆம் தேதியை குறித்து கொடுத்தார். அதன்படிதான் பிப்ரவரி 2ஆம் தேதி கட்சி பெயரை ‘தமிழ்நாடு வெற்றி கழகம்’ என அறிவித்தார் விஜய்.

இதுமட்டுமல்ல கட்சியில் மாநில நிர்வாகிகளை நியமிப்பதிலும் அவர்களின் பிறந்தநாள் தேதி வைத்து ராசி நட்சத்திரம் பார்த்து பதவிகளை கொடுக்க போகிறார் விஜய். தமிழக வெற்றி கழகத்தையும் அதன் தலைவர் விஜய்யையும் வழிநடத்துபவர் ஜோசியர் சந்திரசேகர்தான்” என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். ஜோசியர் பேச்சை கேட்டு அரசியலில் காய் நகர்த்தும் விஜய், சினிமாவை போன்று அரசியலிலும் தடம் பதிப்பாரா?. பொறுத்திருந்து பார்ப்போம்.