கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளை சேர்ந்த 811 கவுன்சிலர்கள் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கின்றனர்.
நகர்ப்புற தேர்தல்
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 811 பதவி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் நெகமம் பேரூராட்சியில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 802 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த பதிவான வாக்குகள் கடந்த 22-ந் தேதி எண்ணப்பட்டன. கோவை மாநகராட்சியில் 4 இடங்களை தவிர மீதம் உள்ள 96 வார்டுகளையும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர். இதேபோல் 7 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றி சாதனை படைத்தது. 33 பேரூராட்சிகளில் மோப்பிரிபாளையம் பேரூராட்சியை சுயேட்சைகளும், வெள்ளலூர் பேரூராட்சியை அ.தி.மு.க.வும் கைப்பற்றின. மீதம் உள்ள 31 பேரூராட்சிகளையும் தி.மு-.க. கைப்பற்றி சாதனை படைத்தது.
பதவி ஏற்பு
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) நடக்கிறது. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் 100 பேர், 7 நகராட்சிகளில் கவுன்சிலர்களாக வெற்றி பெற்ற 198 பேர், 33 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 513 பேர் என மொத்தம் 811 பேர் கவுன்சிலர்களாக பதவி ஏற்கின்றனர்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் விழா கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நாளை காலை நடக்கிறது. அவர்களுக்கு ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். நகராட்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த நகராட்சி ஆணையாளர்கள் பதவி பிரமானம் செய்து வைக்க, கவுன்சிலர்களாக பதவி ஏற்பார்கள். இதேபோல் 33 பேரூராட்சிகளை சேர்ந்த 513 பேருக்கு அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவி பிரமானம் செய்து வைக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் செய்து வருகின்றன.