பழைய வத்தலகுண்டு கோவிலில், மண்டகப்படி கேட்டு, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள், 500 பெண்கள் உட்பட 1200 பேர் சாலை மறியல் போராட்டம்…

பழைய வத்தலகுண்டு கோவிலில்,  மண்டகப்படி கேட்டு, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள், இரவு பகலாக தொடரும்  போராட்டம் நடத்தி வந்தனர். அதிகாரிகள் மத்தியில் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படாததால்,  வத்தலகுண்டு பெரியகுளம் சாலையில், சாமியான பந்தல் அமைத்து, சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனால், இந்த பகுதியில் பதட்டம் பரபரப்பு ஏற்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த, பழைய வத்தலகுண்டுவில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த, சுமார் 3 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். இங்கு, மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது.  இத்திருவிழாவில்,    அனைத்து சமுதாய மக்களுக்கும் மண்டகப்படி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,
சுமார் 1500 குடும்பங்களுடன் பெரும்பான்மையாக உள்ள, தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் மக்களுக்கு மண்டகப்படி மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 30  ஆண்டுகளுக்கும் மேலாக, இச்சமுதாய மக்கள்   மண்டகபடி  கேட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 19 மற்றும் 20-ம் தேதி ஆகிய  இரண்டு நாட்கள் இரவு பகலாக,  பழைய வத்தலகுண்டு,  மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில்,   தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள்  சுமார் 500-க்கு மேற்பட்டோர் இந்து அறநிலைத்துறையை கண்டித்து,  உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.  இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதியுடன், கடந்த 20-ம்  நடத்திய பேச்சுவார்த்தையில், ஜனவரி 27-ஆம் தேதி, உங்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, எழுத்துப்பூர்வமாக  உறுதியளித்திருந்தனர். இதனால்,   தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் போராட்டம், 20-தேதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்,  27-ஆம் தேதி   எந்த உத்தரவும் வராததால், மீண்டும் தங்களின் போராட்டத்தை கடந்த, சனிக்கிழமை தொடங்கி இரவு பகலாக நடத்தி வந்தனர். தொடர்ந்து, 4-வது நாளாக கோவிலுக்குள் சமையல் செய்து   உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில்,  புதன்கிழமை, 500 பெண்கள் உட்பட சிறுவர்கள் குழந்தைகள் என, சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய கொடி ஏந்தி, கருப்பு கொடி பிடித்து, பழைய வத்தலகுண்டு பிரிவில், சாலையில் சாமியான பந்தல் அமைத்து,  வத்தலகுண்டு –  பெரியகுளம் சாலையில், சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என, அறிவித்துள்ளனர். இதனால், நிலக்கோட்டை டிஎஸ்பி.முருகன் தலைமையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இந்த பகுதியில் பரபரப்பு மற்றும்  பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இப்போராட்டம் இரவு 7 மணி வரை நீடித்து வருகிறது.