தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய வரியில்லாத பட்ஜெட் : மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்!…

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் “2024-2025 ம் ஆண்டுக்கான உத்தேச பட்ஜெட்டை மேயர் தாக்கல் செய்தார். இதில் புதிதாக வரி விதிப்பு எதுவும் இடம்பெறாது என்று தெரிவித்தார். பின்பு மேயர் பேசியதாவது கடந்த மாதம் செய்த கனமழையால் தூத்துக்குடியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் வெள்ள சேதங்களை பார்வையிட்டார். ஒரு வார காலத்திற்கு தலைமைச் செயலகமே தூத்துக்குடியில செயல்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டார்.
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் இருந்து மீண்டும் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது புதிதாக ரோடுகள் போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரூ.8 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மண்டல தலைவர் கலைச்செல்வி பேசியதாவது “தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் நுழைவாயிலில் மினி பேருந்துகள் வேகமாக வருவதை கட்டுப்படுத்த வேண்டும். பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் புதிதாக ஒரு வாசல் அமைக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் திருட்டு சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றார். அதிமுக உறுப்பினர் மந்திரமூர்த்தி பேசுகையில், “திரு.வி.க. பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும். சொத்து வரியை ஓராண்டுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆணையர், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் அகற்றப்பட்டுவிட்டது. சுமார் 3ஆயிரம் ஏக்கர் அளவில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் வெள்ளநீரை வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முடியாது. இது தொடர்பாக சம்பந்தபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் துணை ஆணையர் ராஜாராம், பொறியாளர் பாஸ்கரன், துணை செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ், மாநகர் நல அலுவலர் சுமதி, மாநகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி ஆணையர்கள் சந்திரமோகன், ராமச்சந்திரன், தனசிங், சேகர், சுகாதார அலுவலர்கள் ஸ்டான்லி பாக்கியநாதன், ராஜசேகரன், ஹரி, கணேஷ், ராஜபாண்டி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டூராஜா, பால குருசாமி, நிர்மல்ராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.