கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம்…

தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்  சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றமைக்காக பாராட்டுச் சீர்வரிசை வழங்கும் விழா   நடைபெற்றது.  தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ஊர்வலமாக சென்று பாராட்டுச் சீர்வரிசை வழங்கும் விழாவை மேயர் சண்.இராமநாதன் தொடங்கி வைத்தார். ஆணையாளர் மகேஸ்வரி, துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தனர். இந்த பாராட்டுச் சீர்வரிசை ஊர்வலம் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி இரயிலடி வழியாக கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறைவடைந்தது.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தரவரிசை பட்டியல் மாநில அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. புறநோயாளிகள் வருகை உள்நோயாளிகள் அனுமதி பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள், உயர்இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக மற்றும் கருப்பை வாய் பரிசோதனை, கருத்தரித்தவுடன் 12 வாரத்திற்குள் கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, இரும்பு சத்து மாத்திரை வழங்குதல், குழந்தை பிறப்பின் போது 2.5 கிலோவிற்கு மேல் எடை இருத்தல், குழந்தைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டதில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தர வரிசை பட்டியலில் தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மாநில அளவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் அமையப்பெற்றுள்ள கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருளானந்தசாமி நாடார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 12.09.1967ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் நகராட்சி மருந்தகமாக திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து இரத்த பரிசோதனைகள், இதர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் நடைபெறும் கர்ப்பிணிகளுக்கான பரிசோதனையில் சராசரியாக 60 முதல் 70 கர்ப்பிணி தாய்மார்கள் பங்கு பெற்று ஆலோசனை பெற்று வருகின்றனர். அவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கர்ப்பம் குறித்த விளக்கம், கர்ப்பகால கவனிப்பு முறைகள், கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன், அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை, தாய்சேய் நல கண்காணிப்பு மையம், கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு மற்றும் யோகா வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 580 சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. 2023ஆம் ஆண்டு இம்மருத்துவமனைக்கு டெல்லி மருத்துவ குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தேசிய தரஉறுதிச்சான்று கிடைக்கப்பெற்று ரூ.3 இலட்சம் பரிசுத்தொகையும் இம்மருத்துவமனை பெற்றுள்ளது.
மேலும் இம்மருத்துவமனையில் தாய்மை நூலகம் கர்ப்பிணி தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும் கர்ப்பகாலத்தில் நல்ல மனநிலையை உருவாக்கவும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் தாய்மை நூலகம் திறக்கப்பட்டு அதில் 600க்கும் மேற்பட்ட தாய்மை சம்மந்தப்பட்ட புத்தகங்கள் உள்ளன. பாலிகிளினிக் எனப்படும் சிறப்பு மருத்துவர்கள் வருகை 2015 ஆம் ஆண்டு இம்மருத்துவமனையில் தொடங்கப்பட்டு தினந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4 முதல் 8 மணி வரை சிறப்பு மருத்துவ சிகிச்சை ஏழை, எளிய மக்கள் உயர் சிகிச்சை பெறும் வகையில் அமையப்பெற்று இதுநாள் வரை 22124 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இம்மருத்துவமனையில் 9112 உயர் இரத்த அழுத்த நோயாளிகள், 6015 சர்க்கரை நோயாளிகள், 11228 சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள், 45 மார்பக புற்றுநோயாளிகள், 66 கருப்பை வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சிறப்பான செயல்பாடுகளால் தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றமைக்காக பாராட்டுச் சீர்வரிசை மேள தாளம், மலர் மாலைகள், மலர் கிரீடம், பழங்கள், இனிப்புகள் என தஞ்சாவூர் மாநகராட்சியால் கொண்டு செல்லப்பட்டு கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஏ.எஸ்.முத்துக்குமார் தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியை மாநகர்நல அலுவலர். டாக்டர் சுபாஷ்காந்தி தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.