மக்களவைத் தேர்தல் 2024 நாளை முதல் பிரசாரத்தை தொடங்கும் காங்கிரஸ்.!!!..

தெலங்கானாவில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி துவங்கவுள்ளது. ஆளும் மத்திய அமைச்சரவையின் பதவிககாலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் மக்களவை தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நிர்வாக காரணங்களுக்காக தேர்தல் ஆணையமும் ஆரம்பித்து தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.இதையடுத்து, இந்த தகவலை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மறுத்துள்ளார். இந்நிலையில், தெலங்கானாவில் நாளை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி துவங்கவுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் மது கெளட் யாஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடிலாபாத் மாவட்டத்தின் இன்டர்வெல்லி பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.