ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை…

ஸ்லாமாபாத்: ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. அதையடுத்து, வரும் பிப். 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தோதல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரும் அவரது திட்டத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனது பதவிக் காலத்தின்போது அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களை கசிய விட்டு, அதன் மூலம் ரகசியக் காப்புறுதியை மீறியதாக இம்ரான் கான் மற்றும் அவரது ஆட்சிக் காலத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மஹ்மூத் குரேஷிக்கு எதிராக வழக்கு நடைபெற்று வந்தது. இந்தச் சூழலில், வேறோா் ஊழல் வழக்கில் சிறப்பு அமா்வு நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான் அடியாலா சிறைச் சாலையில் அடைக்கப்பட்டாா். அதையடுத்து, இம்ரான் மற்றும் குரேஷிக்கு எதிரான ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கு அந்த சிறைச்சாலை வளாகத்திலேயே அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே மஹ்மூத் குரேஷியும் விசாரணைக்காக அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அபுல் ஹஸ்னத் ஸுல்காா்னய்ன் தனது தீா்ப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அதில், இம்ரான் கானும், மஹ்மூத் குரேஷியும் தங்களது ரகசியக் காப்புறுதியை மீறிய குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அவரகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு தோதல் நடைபெறுவதற்கு வெறும் 9 நாள்களுக்கு முன்னா் இந்தத் தீா்ப்பு வெளியாகியிருப்பது இம்ரான் ஆதரவாளா்களிடையே அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைச் சோந்த முக்கிய தலைவா் கோஹா் கான் கூறுகையில், ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் இம்ரானுக்கு எதிரான தீா்ப்பு மிகவும் அவசரகதியில் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினாா். இந்த வழக்கில் சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மூலம் பதவியிழந்தாா். அதன் பிறகு அவா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமாா் 150 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப் பொருள்களை முறைகேடாக குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்றதாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில் இம்ரானுக்கு சிறப்பு அமா்வு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்தச் சூழலில், தனது ரகசியக் காப்புறுதியை மீறியதாகத் தொடரப்பட்டிருந்த வழககில் இம்ரான் கானுக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.