காட்டு யானை தாக்கி பலியான தம்பதியரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் எல்.முருகன்…

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள புங்கார் காலனி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சன் (வயது 75), துளசியம்மாள் (வயது 70) கணவன் மனைவியான இருவரும் பூதிகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தனர். தினமும் இருவரும் சேர்ந்து வனப்பகுதிக்குள் சென்று   சுண்டைக்காய் பறித்து சேகரிப்பது வழக்கம். கடந்த 24 ஆம் தேதி வழக்கம் போல் விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள வால் மொக்கை என்ற இடத்தில் இருவரும் சேர்ந்து சுண்டைக்காய் பறித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் புதர் மறைவில் நின்றிருந்த காட்டு யானை திடீரென இருவரையும் தும்பிக்கையால் தாக்கி மிதித்ததில் நஞ்சன், துளசியம்மாள் இருவரையும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் எல் முருகன்  இரவு புங்கார் காலனி கிராமத்திற்கு சென்று யானை தாக்கி இறந்த நஞ்சன், துளசியம்மாள் ஆகியோரின் மகன் பழனிச்சாமியை சந்தித்து யானை தாக்கி இறந்தது குறித்து கேட்டறிந்ததோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கலைவாணி விஜயகுமார்,  தேர்தல் பொறுப்பாளர் கதிர்வேல், கட்சி நிர்வாகி கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.