உதகையில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!…

தகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை வழக்கத்தை விட பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் இருக்கும். குறிப்பாக நவம்பர் மாத துவக்கத்தில் ஆரம்பிக்கும் பனிப்பொழிவு படிப்படியாக உறைபனியாக தீவிரமடையும். அந்த வகையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன.27) அதிகாலை வழக்கத்தை விட உறை பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.அப்பகுதியில் 2.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதால் கடும் குளிரில் மக்கள் வாடி வருகின்றனர். இதனால் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும், பச்சை புல்வெளிகள் மீதும் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சி அளித்தது. தற்போது குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சம வெளிப்பகுதிகள் மினி காஷ்மீர் போல காட்சியளிக்கின்றன.