கூட்டணியை விட்டு 2 முறை ஓடிப் போய் திரும்ப வரும் நிதிஷ்குமார்…

பாட்னா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 2 முறை விலகிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் அதே கூட்டணிக்கு திரும்ப இருப்பதாக பரபரப்பு நிலவுகிறது. இதனையடுத்து பாஜக எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சிகளான நிதிஷ்குமாரின் ஜேடியூ, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சிரோமணி அகாலி தளம், அண்ணா திமுக ஆகியவை அடுத்தடுத்து வெளியேறின. தற்போதைய நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவை தவிர பெரிய கட்சிகள் எதுவுமே இல்லை. லோக்சபாவில் 10 எம்பிக்களைக் கூட பெறாத கட்சிகள்தான் அதிகம் உள்ளன. அதேபோல என்சிபி, சிவசேனாவின் அதிருப்தி கோஷ்டிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கின்றன.

அமித்ஷா அழைப்பு: தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த நிலையில், மாநில கட்சிகள் விரும்பினால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம்; கூட்டணியைவிட்டு வெளியேறிய கட்சிகள் மீண்டும் திரும்பலாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்திருந்தார்.

எத்தனை முறை ஓடுவது திரும்புவது?: இந்த அழைப்பைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையப் போவதாக பரபரப்பு கிளம்பியது. பீகாரில் தற்போது ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ்- இடதுசாரிகளின் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜக பக்கம் நிதிஷ்குமார் தாவ திட்டமிட்டுள்ளாராம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நிதிஷ்குமார் நீண்டகாலம் பயணித்தார். 2013-ம் ஆண்டு முதன் முதலில் அக்கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்குமார். பின்னர் 2017-ம் ஆண்டு மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்பினார். ஆனால் 2022-ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். பாஜக கூட்டணியில் இருந்து 2 முறை வெளியேறிய நிதிஷ் தற்போது மீண்டும் அதே கூட்டணிக்கு திரும்ப இருக்கிறார். இதனால் நிதிஷ்குமார் மீதான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என பீகார் மாநில பாஜகவினருக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. “இந்தியா” கூட்டணி அம்போ! பாஜக கூட்டணிக்கு திரும்பும் நிதிஷ்குமார்? பீகார் ஆட்சியை கலைக்க பரிந்துரை?

பாஜக தலைவர்களுடன் உரையாடல்: இந்த பரபரப்புக்கு நடுவே பீகாரில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நேற்று தேநீர் விருந்து நிகழ்வு நடைபெற்றது. இதில் நிதிஷ்குமார், பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் துணை முதல்வரான ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கவில்லை. அத்துடன் ஆளுநர் மாளிகை நிகழ்வில் நேற்று வரை பரம எதிரிகளாக இருந்த பாஜக தலைவர்களுடன் மகிழ்வாகவும் இயல்பாகவும் நிதிஷ்குமார் உரையாடிக் கொண்டிருந்தார். இதனால் பாஜக பக்கம் நிதிஷ்குமார் போவது உறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.

பாஜக ஆலோசனை: இந்த பரபரப்புக்கு நடுவே இன்று பாட்னாவில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் மீண்டும் கூட்டணிக்கு வருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.

நிதிஷ்குமார் திட்டம்: நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுடன் இணைந்து நாளை ஜனவரி 28-ல் புதிய ஆட்சியை அமைப்பார்; அந்த ஆட்சியில் பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும். அத்துடன் சட்டசபையை கலைக்க பரிந்துரைப்பார்; லோக்சபா தேர்தலுடன் பீகார் மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்தலாம் என்பதுதான் திட்டம் எனவும் கூறப்படுகிறது. இன்றும் நாளையும் பீகார் அரசியலை முன்வைத்து பரபரப்பு நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.