கோவையில் தொடர் நகை பறிப்பு, திருட்டு வழக்கில் ஈடுபட்ட 2 பேர் கைது – ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!

கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் காட்டூர், சரவணம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, நகை பறிப்பு , திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தன . இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் மேற் பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் 150 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள் . அதில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கணேஷ் குமார் (வயது 23) பார்த்திபன் ( வயது 22) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள் 2 பேரும் கோவையில் கத்தியை காட்டி மிரட்டி 3 பேரிடம் நகை பறித்தது. பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்காதது, வழிபறியில் ஈடுபட்டது .மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட 7 வழக்குகள் அவர்கள் மீது இருப்பது தெரிய வந்தது . இதையடுத்து போலீசார் 2 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 பவுன் நகைகள், லேப்டாப், 2 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ரூ 8 லட்சம் மதிப்பு பொருட்கள் மீட்க்கப்பட்டது. பின்னர் போலீசார் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கைதான 2 பேர் மீதும் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன .இவர்கள் கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியில் தங்கி இருந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ. 55 லட்சத்தில் 110 அதிநவீன கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ரூ. 30 லட்சத்தில் 500க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன . இவ்வாறு அவர் கூறினார்..