திருப்பூர் மாவட்டம்: தாராபுரத்தில், பவளக்கொடி கும்மி கலை குழுவினர் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒரே இடத்தில் 100 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் ஆடி விநாயகர் துணையுடன் முருகப்பெருமான் திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடி அசத்தினர். இதைக் காண தாராபுரம், தென்தாரை, காமராஜபுரம், வள்ளுவர் தெரு, அண்ணாநகர், கண்ணன் நகர், சீதாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பவளக்கொடி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர். நிகழ்ச்சிக்கு கே.விஸ்வநாதன் மற்றும் நா.அருணாச்சலம் ஆகிய ஆசிரியர்கள் தலைமை வகித்தனர். பவளக்கொடி கும்மியாட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கையில் கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது. அதனை மீட்டெடுக்கும் பணியில் கும்மியாட்டக் கலைஞர்கள் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என இவ்வாறு தெரிவித்தார்.