சத்தியமங்கலம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் நடராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின்வருமாறு.
வேலுச்சாமி, திமுக: நகர்மன்ற கூட்டம் குறித்த நேரத்தில் தாமதம் இன்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: நகர் மன்ற கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் குறித்த நேரத்தில் வர அறிவுறுத்தப்படும். லட்சுமணன், அதிமுக: நகராட்சி பகுதியில் பைப்லைன் அமைக்கும் பணியில் பைப்பின் அளவு மற்றும் தரம் குறிப்பிடப்பட வேண்டும். நகராட்சியில் புதியதாக கட்டப்படும் கட்டிட பணிக்கு சரி வர தண்ணீர் ஊற்றுவதில்லை.
தலைவர்: கட்டிடப் பணி நடைபெறும் பகுதியில் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சரிவர தண்ணீர் ஊற்றுகிறார்களா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநாவுக்கரசு, பாமக: பணிகள் செய்ய டெண்டர் விடப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. எப்போது பணி தொடங்கப்படும்.
தலைவர்: இந்த வாரத்தில் பணிகள் தொடங்கப்படும்.
அரவிந்தசாகர், பாஜக: மெயின் ரோட்டில் சாக்கடை சுத்தம் செய்யவில்லை. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி கட்டடத்திற்கு பதிலாக புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
தலைவர்: சாக்கடை சுத்தம் செய்து தரப்படும். புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
தனபாக்கியம், அதிமுக: எனது வார்டில் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் சரி செய்து தர வேண்டும். தெருவிளக்குகள் பழுதானால் உடனே சரி செய்வதில்லை.
தலைவர்: மோட்டார் சரி செய்து தரப்படும். தெருவிளக்குகள் உடனடியாக பழுது நீக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும்.
சாவித்திரி, திமுக: எனது வார்டில் பெரியகுளம், துணை மின் நிலையம் பகுதியில் வசிப்பவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்துள்ளார்கள். இன்னும் பட்டா வழங்கவில்லை.
தலைவர்: பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சீனிவாசன், திமுக: நகராட்சியில் வரவு செலவு குறித்த அறிக்கை விபரங்கள் வழங்கப்படுமா. நகர்மன்ற கூட்டத்தில் அனைத்து அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். நகராட்சி அலுவலகத்திற்கு வரும் மக்களை அதிகாரிகள் நாற்காலியில் அமர வைத்து பேச வேண்டும்.
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகராஜ், திமுக: புதிய வீடு கட்டு முடித்தவர்கள் வீடு கட்டு முடிக்கப்பட்ட சான்று கேட்டால் அலுவலகத்தில் சான்று உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை.
கட்டிட பிரிவு அதிகாரி: வீடு கட்டி முடித்தவுடன் கட்டி முடிக்கப்பட்ட சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
உமா,பாஜக: எனது வார்டில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். சந்தை கடை கார்னரில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுவதில்லை.
தலைவர்: தற்போதுள்ள சூழ்நிலையில் பொது குடிநீர் குழாய் அமைத்தால் அப்பகுதியில் உள்ள வீட்டு இணைப்புகளுக்கு தண்ணீர் அழுத்தம் குறைந்து மீண்டும் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கும். இது குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சந்தை கடை கார்னரில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுவது குறித்து காவல்துறைக்கு கடிதம் எழுதப்படும்.
ஜெயந்தி, திமுக: ராமர் கோவில் சந்தில் உள்ள மெர்க்குரி வழக்கு பழுதாகி விட்ட நிலையில் நான் பலமுறை புகார் தெரிவித்த நிலையில் ஒரு மாதம் கழித்து தான் பழுது நீக்கப்பட்டுள்ளது. தெருவிளக்கு பணிகளை உடனடியாக செய்து தர வேண்டும்.
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய சுகாதார ஆய்வாளர் நகராட்சி பகுதியில் வீட்டுத்தோட்டம் அமைத்துள்ள பொதுமக்கள் நகராட்சியை அணுகி சலுகை விலையில் வழங்கப்படும் காய்கறி கழிவில் தயாரிக்கப்பட்ட உரத்தை வாங்கி பயன்பெறலாம் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.