மாமல்லபுரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்ற நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சியில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு, திமுகவின் மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளே காரணம் என அக்கட்சியினர் கூறியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், இடைக்கழிநாடு, அச்சிறுப்பாக்கம், கருங்குழி ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மேலும், வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாமல்லபுரம் பேரூராட்சியைத் தவிர மற்ற பேரூராட்சிகளில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியது.
மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 4 இடங்களிலும் கூட்டணி கட்சியான மதிமுக மற்றும் சுயேச்சைதலா ஓர் இடத்தில் வெற்றி பெற்றன.
ஆனால், அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்று பேரூராட்சியை தன்வசமாக்கியுள்ளது. அதிமுகவின் இந்த வெற்றிக்கு திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள்தான் காரணம் என அக்கட்சியின் தொண்டர்கள் கூறியுள்ளனர்.
திமுகவின் மாவட்ட பொறுப்பில் உள்ள உள்ளூர் நபர், பிரச்சாரத்தின்போது குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் நம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது போல் பேசியதாலும், மீனவர்பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் முகம் சுளிக்கும் வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக உள்ளூர் தொண்டர்கள் கூறியுள்ளனர்.
இதனால், மாமல்லபுரம் பேரூராட்சியை மீண்டும் அதிமுக கைப்பற்றியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகிகள் மாமல்லபுரம் பகுதியில் கவனம் செலுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக அதிக வாக்குகளை பெற முடியும் என்ற நிலை உள்ளதாக உள்ளூர் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.