திருப்பதி கோயிலைவிட திருச்செந்தூரில் வசதிகள் மேம்படுத்தப்படும்- அமைச்சர் கா.ராமச்சந்திரன்..!

திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள் முடிந்தவுடன் திருப்பதி கோவிலைவிட திருச்செந்தூர் திருக்கோவில் சிறப்பாக இருக்கும் என  சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்  தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவது குறித்து  சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்  ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்பேரில், தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு செய்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். திருச்செந்தூரில் 1967ம் ஆண்டில் இருந்து ஓட்டல் தமிழ்நாடு 4.57 ஏக்கரில் 47 அறைகளுடன் இயங்கி வருகிறது. மேலும், கூடுதல் அறைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருச்செந்தூரில் மற்ற எந்தவொரு ஓட்டல்களிலும் ஓட்டல் தமிழ்நாடு அளவுக்கு அதிக இடவசதி கிடையாது. தற்போது ஓட்டல் தமிழ்நாட்டில் உள்ள படுக்கைகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், இங்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்காக சுமார் 55 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்து வருகிறோம். ஓராண்டிற்குள் பழுதுகள் முழுமையாக சரிசெய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கடற்கரைப்பகுதியை கடல்நீர் சாகச விளையாட்டுகள் அடங்கிய சுற்றுலா தலமாக ஏற்படுத்த ரூ.1.70 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை தொடங்குவது தொடர்பாக நேரில் சென்று கள ஆய்வு செய்தோம். இத்திட்டத்திற்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக நிர்வாகத்திடம் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.45.46 இலட்சம் முதற்கட்டமாக பெறப்பட்டு சாகச விளையாட்டுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. முள்ளக்காடு கடற்கரை கோவளம் கடற்கரையைப்போல் நன்றாக மேம்படுத்தப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் மற்றும் மணப்பாடு சிலுவைக்கோவில் ஆகிய 2 இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அடுத்த ஆண்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
வருகின்ற 5ம் தேதி நடைபெறும் சுற்றுலா மேம்பாடு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் ஓட்டல் தமிழ்நாடுகளில் உள்ள அறைகளின் வாடகை தொடர்பாக ஆலோசிக்கப்படும். மேலும், ராமேஸ்வரத்திற்கு கடந்த ஆண்டு 1.80 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு கடந்த 6 மாதத்தில் மட்டும் 1.60 கோடி சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளனர். இந்த ஆண்டு 3 கோடிக்கு சுற்றுலா பயணிகள் வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதன்படி, திருச்செந்தூருக்கு கடந்த ஆண்டு 58.67 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகைதந்தனர்.
இந்த ஆண்டு கடந்த 4 மாதத்தில் மட்டும் 28.22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளனர். இதை இன்னும் அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது திருச்செந்தூர் திருக்கோவில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் திருப்பதி கோவிலைவிட திருச்செந்தூர் திருக்கோவில் சிறப்பாக இருக்கும். எனவே வருங்காலங்களில் இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என  சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்  தெரிவித்தார்.
ஆய்வில் சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப்நந்தூரி,  மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ்,  திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், மண்டல மேலாளர் (சுற்றுலா வளர்ச்சிக்கழகம், மதுரை) டேவிட் பிரபாகரன்,  திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், சுற்றுலா அலுவலர் திருவாசன், திருச்செந்தூர்  வட்டாட்சியர் வாமனன்  மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.