தேர்தல் முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த டொனால்ட் டிரம்ப்..!

நியூயார்க்: தேர்தல் முறைகேடு வழக்கில் அட்லாண்டா சிறையில் சரணடைந்து தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இதற்காக அவர் ரூ.1.6 கோடி தொகையை பிணையாக செலுத்தியிருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளார். இந்நிலையில் 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெறவில்லை. இதனையடுத்து அவர் பதவி விலக கூடாது என அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கவும், புதிய அதிபர் பதவியேற்பு விழா நடப்பதை தடுக்கவும் ஆங்காங்கு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்ததில் 5 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு மாகாணங்களில் டிரம்ப்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இப்படியாக ஜார்ஜியா மாகாணத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணை மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே டிரம்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டது.

இதனையடுத்து நேற்று வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து டிரம்ப் அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். அமெரிக்க வரலாறு எத்தனையோ அதிபர்களை பார்த்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் யார் மீதும் குற்றவியல் வழக்குகள் பதிவானது கிடையாது. ஆனால் முதல் முறையாக டிரம்ப் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டிரம்ப் சிறையில் ஆஜரான நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்துக்கொண்டனர்.

டிரம்ப் அட்லாண்டா சிறையில் சுமார் 20 நிமிடங்கள் வரை இருந்திருக்கிறார். இந்த 20 நிமிடங்களும் அட்லாண்டா பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ரூ.1.6 கோடியை ஜாமீன் தொகையாக கொடுத்து சிறையிலிருந்து ஜாமீன் பெற்றிருக்கிறார். டிரம்ப் சிறைச்சாலைக்கு செல்வது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் தனது பிறந்தநாள் அன்று கூட சிறைக்கு சென்றிருந்தார். வெள்ளை மாளிகையிலிருந்த முக்கிய ஆவணங்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தேர்தல் மோசடி, ஆவணகளை சட்டவிரோதமாக கையாண்டது, பாலியல் குற்றச்சாட்டு என இவர் மீது ஏராளமான புகார்கள் இருக்கின்றன. எதிர்வரும் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்ப், தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நீதிமன்ற வழக்கு மற்றும் சிறை தண்டனை இவரது அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது..