உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது பேசு பொருளான நிலையில், நேற்று சென்னை வந்த ரஜினி, விமான நிலையத்தில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றார். அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், திரும்பும் வழியில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்றார்.
அங்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது பேசு பொருளானது. பலரும் அதிக வயது கொண்ட ரஜினி, அவர் காலில் விழலாமா என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது உத்தரபிரதேசப் பயணத்தின் போது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினி, இளம் வயதினராக இருந்தாலும் சந்நியாசி, யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம், அதை தான் செய்தேன் என்று கூறினார்.