பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. பிரதமர் மோடி, சபைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
எனினும், பிரதமர் மோடி சபைக்கு வரவில்லை. இதனால், பிரதமரை பதில் அளிக்க வைப்பதற்காக, ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம்பிர்லா, விவாதத்துக்கு ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, ஆகஸ்ட் 8-ந்தேதி முதல் அதாவது நேற்று முன் தினம், நேற்று, இன்று என 3 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இன்று மாலை நம்பிக்கையில்லா திர்மானத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். சுமார் 2 மணி நேரம் பிரதமர் மோடி பேசினார். அப்போது 2024 ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருமென்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி பேசி முடித்ததும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டதால் தீர்மானத்திற்கு எதிராக குரல் எழவில்லை.