வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமனறத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் பிற கூட்டுறவு சங்கங்கள் மூலம் வினியோகிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.20 குறைந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது . மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் நேற்று ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.62 முதல் ரூ.68 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து வருவாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் தக்காளி விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.