சர்வே செய்வதால் மட்டுமே மேகதாது அணை கட்ட முடியாது – அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!

சென்னை: மேகதாதுவில் கர்நாடக அரசு நில அளவீடு செய்வதால் மட்டுமே அணை கட்டிவிட முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சித்தால் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கில் அணை கட்டினால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்போது வரை கிடைக்காததால் தற்போது மாற்று வழியை கண்டறிய கர்நாடக அரசு தயாராகி வருகிறது.

அணை தொடர்பான திட்ட அறிக்கையில் ஏராளமான மரங்கள் வெட்டப்படும் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டு உள்ளது

அதை சரி செய்ய ஏதுவாக மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வு பணிக்காக நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. இவர்கள் நில அளவீடு பணிகளை தொடங்கி உள்ளனர்.

கர்நாடகா-தமிழ்நாடு காடுகளுக்கு இடையேயான எல்லையை குறிக்க ஒவ்வொரு 20 மீட்டருக்கும் மர கட்டைகளை வைத்துள்ளனர். மழை, காற்று, வெள்ளம் போன்றவற்றால் மரக்கட்டைகள் பழுதடைந்து குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் கான்கிரீட் தூண்கள் அமைக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் ஒருங்கிணைந்த நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு வனத்துறை முதன்மை வன பாதுகாவலரின் ஒப்புதலை பெற வேண்டும் என வனத்துறையினர் கூறினர்.

இதை தொடர்ந்து மேகதாது திட்டத்தில் நீரில் மூழ்கும் பகுதிகள் மற்றும் அழியும் மரங்கள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு உதவும் வகையில் அளவுகள் அமைத்து வருகின்றனர். மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானிலை அனுமதித்தால் 60 நாட்களுக்குள் கணக்கெடுப்பை முடிக்க முடியும் என்று கர்நாடக வனத்துறை அதிகாரி மாலதி பிரியா கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த துரைமுருகன், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சித்தால் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றார். மேகதாதுவில் கர்நாடக அரசு நில அளவீடு செய்வதால் மட்டுமே அணை கட்டிவிட முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசும் விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. அதேபோல காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் மேகதாது அணை குறித்து விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்போது வரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.