சி.எஸ்.ஆர் ஃபண்ட் தொடர்பான ஆளுநரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்.!!

சி.எஸ்.ஆர் ஃபண்ட் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்ற ஆளுநரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ரஷ்ய விண்வெளி ஏவுதளப் பயண பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:

கொரோனா காலத்தில் ராக்கெட் சயின்ஸ் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆன்லைன் பயிற்சியில் பங்கெடுத்த மாணவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல உள்ளனர். இந்தியாவுக்கு ரஷ்யா அதிக உதவிகள் செய்து உள்ளது. அங்கு நம் பள்ளி மாணவர்கள் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் சமீபத்தில் மணற்கேணி திட்டத்தை கொண்டு வந்தார்.அதில் 7000 வீடியோக்கள் மாணவர்களின் அறிவை வளர்க்கும் வகையில் உள்ளது. மேலும் தொழில்நுட்பத்தை பொருத்தவரை வரும் நாட்களில் ராக்கெட் சயின்ஸ் போன்ற வீடியோக்களும் அதில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

மெஷின் லார்னிங், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்டவற்றை கற்று கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளில் எவற்றை நிறைவேற்ற முடியும் என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து நிதிக்கு நிலைமைக்கு ஏற்ப ஆசிரியரின் கோரிக்கைகள் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.

பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சி.எஸ்.ஆர் ஃபண்ட் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற ஆளுநர் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. சி.எஸ்.ஆர் பண்ட் நமக்கு ரூ.100 கோடி கிடைத்துள்ளது மத்திய அரசின் நிதி திட்டங்கள் அனைத்தையும் தமிழ்நாடு முறையாக பயன்படுத்தி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.