டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி, சோனியா காந்தியை தேடிச்சென்று திடீரென பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மேலும் அவர்கள் 2 பேரும் பேசியது என்ன? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி மக்களவைக்கு வந்தார்.
அப்போது அவர் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட எம்பிக்களுக்கு வணக்கம் தெரிவித்தார். இந்த வேளையில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார்.
திடீரென சோனியா காந்தியின் அருகே சென்ற பிரதமர் மோடி அவரிடம் பேச்சு கொடுத்தார். இதனை யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிரதமர் மோடியின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால் அனைவரின் பார்வையும் பிரதமர் மோடி, சோனியா காந்தியின் பக்கம் திரும்பியது.
இந்த வேளையில் பிரதமர் மோடி, சோனியா காந்தியிடம் அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார். அப்போது, சோனியா காந்தி, ”நான் நலமாக இருக்கிறேன்’ என பதிலளித்தார். இதையடுத்து பிரதமர் மோடி அங்கிருந்து தனது இருக்கைக்கு சென்றார். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக பிரதமர் மோடி, சோனியா காந்தி ஆகியோர் உள்ளனர். இத்தகைய சூழலில் இந்த சந்திப்பு மக்களவையில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.