குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக திமுக அரசு அனைத்து உதவிகளையும், ஆதரவினையும் நல்கி வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு இன்றியமையாதது. பல்வேறு பன்னாட்டு மற்றும் இந்தியாவின் பல பெருந்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு நம் மாநிலத்தில் உள்ள மிகச்சிறந்த தரத்திலும் மிகப்பெரும் எண்ணிக்கையிலும் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஒரு மிக முக்கிய காரணியாகும்.
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் புத்தாக்கங்கள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 27 ஆம் நாள் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளாகக் கொண்டாடுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 50 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஒரு கோடி நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்பை அளிக்கின்ற. இந்திய அளவில், பாரம்பரியத் துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதுடன், வளர்ந்து வரும் துறைகளான பாதுகாப்பு மற்றும் விண்வெளி, மின்சார வாகனம், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட துறைகளிலும் தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதனை நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்ட பொருளாதார மந்த நிலையினாலும் கோவிட் 19 பெருந்தொற்றினாலும் நலிவுற்றிருந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டும் வகையில் 2022-23 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட, 49 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, ரூ.911.50 கோடி ஒதுக்கீடு செய்து பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தினை நன்கு உணர்ந்த இவ்வரசு, அந்த தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக அனைத்து உதவிகளையும், ஆதரவினையும் நல்கி வருகின்றது.
மேலும் தமிழக தொழில் துறையின் தூண்களாக விளங்கும் இத்துறையின் வளர்ச்சியை மேன்மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும் என்பதை இந்த இனிய நன்னாளில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதோடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.