கோவையில் வெளி மாநில பதிவு பெற்ற 9 ஆம்னிபஸ்கள் பறிமுதல்

கோவை உள்பட பல்வேறு ஊர்களில் நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநில பதிவு எண்களுடன் தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்களில் பயணிகள் பயணித்து வருகின்றனர் .இந்த நிலையில் வெளி மாநில அனுமதி மற்றும் பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் மறு பதிவு செய்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தர விட்டிருந்தது. இது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனால் அதை மீறி வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் தொடர்ந்து இயக்கப்படுகிறது. அதை கண்டறிந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோவை சரக வட்டார போக்குவரத்து இணை ஆணையாளர் சிவக்குமரன் தலைமையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சத்தியகுமார், சிவகுருநாதன், ஆனந்தன், பாலமுருகன், ஈஸ்வரன் மற்றும் ஆய்வாளர்கள் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். அப்போது நாகலாந்து அருணாச்சல பிரதேசம், கேரளா கர்நாடக மாநில பதிவு எண்களுடன் வெளி மாநில அனுமதியுடன் கோவையில் இயக்கப்பட்ட 9 ஆம்னி பஸ்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பஸ்களில் இருந்த பயணிகள் மாற்றுபஸ்கள் மூலம்அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:- இதுபோன்று தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும். விதிமுறைகளை மீறினால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும். பஸ்களுக்கு தலா ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.