டெல்லி: ஜனவரி மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதியிலிருந்து உக்ரைன் ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து இந்தியா ரூ.35,000 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா உள்பட சில உலக நாடுகள் எதிர்த்தாலும், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் இருந்து பின்வாங்கவில்லை.
கடந்த ஜூலையில் இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் இரண்டாவது இடத்தில் இருந்த சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரியாத் திரும்பவும் தன் நிலையில் வந்தபின், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் மூன்றாவது இடத்தை ரஷ்யா இன்றளவும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. வணிகத் துறைத்தரும் புள்ளி விவரங்களின்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி எட்டு மடங்கு அதிகமாக அதிகரித்து, 11.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டில் 1.3 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரஷ்யாவிடமிருந்தான இறக்குமதி 12 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டும் 7 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜனவரி மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. ஜனவரி மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா நாள் ஒன்றுக்கு 1.4 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் இந்தியா 9.2% அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.