கரூர்: கரூர் திருமாநிலையூரில் இன்று (ஜூலை 2) நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 80,750 பேருக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.518.44 கோடியில் 99 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.28.60 கோடியில் முடிவுற்ற 95 பணிகளை திறந்து வைக்கிறார்.
நாளை நாமக்கல்லில் நடைபெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிலும் முதல்வர் பங்கேற்க உள்ளார்.
கரூர் திருமாநிலையூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 80,750 பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும்,ரூ.518.44 கோடியில் 99 பணிகளுக்குஅடிக்கல் நாட்டி, ரூ.28.60 கோடியில் முடிவுற்ற 95 பணிகளை திறந்து வைத்துப் பேசுகிறார்.
விழாவில், மாநில மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மேயர் கவிதா, எம்எல்ஏக்கள் குளித்தலை ரா.மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக, இவ்விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலைதிருச்சி வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் கரூர் வந்தார்.
பின்னர், சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த முதல்வரை தொழில் முனைவோர்கள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
நாளை நாமக்கல்லில்…
நாமக்கல் பொம்மைகுட்டை மேட்டில் நாளை (3-ம் தேதி) நடைபெறும் திமுக, கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மற்றும் கூட்டணிகட்சிகளைச் சேர்ந்த மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல்லில் நாளை(3-ம் தேதி) காலை நடக்கிறது.
இதற்காக, நாமக்கல் – சேலம் சாலை பொம்மைகுட்டைமேட்டில் மாநாட்டுக்கான மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் வரவேற்றுப் பேசுகிறார்.
மாநாட்டு அரங்கில் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மக்களோடு நில், மக்களோடு வாழ் என்ற தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகிறார். இதைத்தொடர்ந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பேசுகின்றனர்.
மாநாட்டில் நாளை மாலை 4 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள்,எம்எல்ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.