செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மாமியார் வசந்தா, பேரம்பாக்கம் வெண்ணியப்பன், சந்திரா, மாரியப்பன், முத்து, தம்பு, சந்திரன், சின்னக்கயப்பாக்கம் சங்கர்,புத்தூர் ராஜி ஆகியோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்உத்தரவின்பேரில் தலாரூ.10 லட்சம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களையும் உறவினர்களையும் சந்தித்து முதல்வர் ஆறுதல் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் 2 உதவி ஆய்வாளர்கள் மோகன சுந்தரம், ரமேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் துரைபாண்டி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். எஸ்பி பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலையும் செய்யூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணைசிபிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர். முதல் கட்டமாக நேற்று ஏடிஎஸ்பி மகேஸ்வரி செங்கல்பட்டு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த அஞ்சாலையிடம் விசாரித்தார். அதேபோல் மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து பெருங்கரணை, புத்தூர் கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் வீட்டில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி மகேஸ்வரி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். முன்னதாக சித்தாமூர், அச்சரப்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் இருந்து கோப்புகள் பெறப்பட்டன. கள்ளச்சாராயம் அருந்தி அஞ்சாலையின் கணவர் சின்னதம்பி மற்றும் தாய் வசந்தா உயிரிழந்த நிலையில் அஞ்சலை மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள வி.வி.சாய் பிரனீத் உத்தரவின்பேரில், கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்காக செங்கல்பட்டு டிஎஸ்பி பரத் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் ஓதியூர் கடற்கரை, சூனாம்பேடு, பெருங்கரணை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் 147 டாஸ்மாக் மதுபான கடைகள் அருகில் இயங்கி வந்த மதுபான கூடங்களில் கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது 70 மதுபானக் கூடங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது.