தருமபுரி நகராட்சி எல்லையை விரிவுபடுத்த 8 ஊராட்சிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத் தருமபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, சுகாதார அலுவலர் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளர் மாதையன் மற்றும்
அலுவலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசும்போது, நாளுக்கு நாள் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும். ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பேசினார்கள். கவுன்சிலர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் மற்றும் ஆணையாளர் தெரிவித்தனர். கூட்டத்தில் தருமபுரி நகரை ஒட்டி உள்ள தெற்குப் பகுதியில் இருக்கும் இலக்கியம்பட்டி, தடங்கம், ஜெட்டி அள்ளி மற்றும் அதியமான்கோட்டை ஆகிய கிராம ஊராட்சிகள், கிழக்குப் பகுதியில் செட்டிக்கரை, ஏ.கொல்லஅள்ளி ஊராட்சிகள், மேற்குப்பகுதியில் சோகத்தூர் ஊராட்சி, வடக்குப் பகுதியில் அளே ஊராட்சி என 8 ஊராட்சிகளும் முழுமையாக நகராட்சியுடன் இணைத்து நகராட்சி எல்லையை விரிவுபடுத்த தருமபுரி உரிய முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்புவது, ரூ. 10 லட்சம் மதிப்புள்ள திட்ட பணிகள் மேற்கொள்வது, தினசரி காய்கறி மார்க்கெட், புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் உள்ள கட்டணக் கழிப்பிடங்கள், சைக்கிள் ஸ்டாண்டுகள், பொருள் பாதுகாப்புஅறை, ஆடு அடிக்கும் தொட்டி, வர்த்தக ஒலிபெருக்கி உள்ளிட்ட குத்தகை இனங்கள் புதுப்பித்தல் என்பது உள்ளிட்ட மொத்தம் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் எந்தவித விவாதமும் இன்றி கூட்டம் தொடங்கிய 5 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டு உடனடியாக கூட்டம் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.