ஈரோடு கிழக்கு தொகுதியில் 75% வாக்குகள் பதிவு..!

ரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த மாதம் 4ஆம் தேதி மரணமடைந்ததையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் மேனகா உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதற்காக தொகுதி முழுவதும் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், வாக்காளர்கள் சின்னங்களை கண்டுபிடித்து வாக்களித்தனர்.

தொகுதியில் பதற்றமான வாக்குசாவடிகளில் வெளிப்புற பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் ஆண்கள் 12,679 பேரும், பெண்கள் 10,294 பேரும் என 22,973 பேர் வாக்களித்திருந்தனர். 11 மணி நிலவரப்படி 27.89 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

மதியம் 1 மணி நிலவரப்படி 44.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. மாலை 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆண்கள் 65,350 பேரும், பெண்கள் 69,400, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேர் என 1 லட்சத்து 34 ஆயிரத்து 758 பேர் வாக்களித்திருந்தனர்.

மாலை 6 மணி நிலவரப்படி 74.69 வாக்குகள் பதிவானதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறினார். 82,021 ஆண் வாக்காளர்களும், 87,907 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 17 பேரும் வாக்களித்துள்ளனர். மொத்தமாக பதிவான வாக்குகள் 1,69,945. கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 66.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது 8.46 சதவீதம் கூடுதலாக பதிவாகி உள்ளது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில், உள்ளூர் போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் என சுமார் 3 ஆயிரம் பேர் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணிகளை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அந்த பெட்டிகள் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டு போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன், ஈரோடு அடுத்த சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று இரவு முதலே 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். 2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். நாளை மறுதினம் (வியாழன்) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.