கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரும் காணொலி மூலம் என். ஐ.ஏ . கோர்ட்டில் ஆஜர் – வரும் 6-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு..!

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த மாதம் 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது 28) என்ற வாலிபர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேசா முபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சல்கான், முகமது தல்கா ,முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில்,ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரும் கடந்த வாரம் சென்னை பூந்தமல்லியில் உள்ள என் ஐ.ஏ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் 6 பேரையும் மீண்டும் விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டும் என்பதால் பாதுகாப்பு கருதியும், நீண்ட தூரம் அழைத்து செல்லவேண்டும் என்பதால் கோவை மத்திய சிறையில் இருந்து 6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள என் ஐ.ஏ சிறப்பு நீதிபதி முன் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேரையும் வருகிற 6-ந் தேதி வரை காவலை நீடித்து உத்தரவிட்டார்.