கல்லூரி மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை. பேராசிரியர் உட்பட 4பேர் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஒரு கல்லூரியில் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2நாட்களுக்கு முன் சமூக நலத்துறை அதிகாரிகள் தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள் 6 பேர் சில பேராசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் இரவு நேரத்தில் அடிக்கடி குறுஞ் செய்திகளும், ஆபாச புகைப்படங்களும் அனுப்பி வருவதாகவும், வகுப்பறையில் மிகவும் நெருக்கமாக நின்று பாடம் எடுப்பதாகவும், அங்கு வந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சமூகநலத்துறை அதிகாரிகள் வால்பாறை உட் கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் வால்பாறை போலீஸ் துணைசூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் சதீஷ்குமார் ( வயது 39) உதவி பேராசிரியர் முரளி ராஜ் (வயது 33 )லேப் டெக்னீசியன் அன்பரசு (வயது 37) இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் ராஜபாண்டி (வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் உட்பட  4பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.