தமிழ்நாட்டிற்கு 529 டி.எம்.சி., நீர் திறப்பு : தொடர் கனமழையால் கர்நாடகா தாராளம்..!

சென்னை : தொடர் மழை காரணமாக, தமிழகத்திற்கு நடப்பாண்டில் 529 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா திறந்து விட்டுள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நடப்பாண்டு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., நீரை, கர்நாடகா வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 16.4 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள்ளது.ஜூலையில் 31.2 டி.எம்.சி.,க்கு பதிலாக, 106 டி.எம்.சி.,யும், ஆகஸ்ட்டில் 45.9 டி.எம்.சி.,க்கு பதிலாக 223 டி.எம்.சி.,யும், செப்டம்பரில் 36.7 டி.எம்.சி.,க்கு பதிலாக 105 டி.எம்.சி., நீரும் தமிழகத்திற்கு கிடைத்தது.நடப்பு அக்டோபரில், 20.22 டி.எம்.சி., நீரை கர்நாடகா திறக்க வேண்டும். இதில், 19ம் தேதி வரை, 12.3 டி.எம்.சி., நீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 76.69 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. கர்நாடகாவில் நடப்பாண்டில் தென் மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்ததால், ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை விட அதிகளவு நீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.நடப்பாண்டில் மொத்தமாக, 19ம் தேதி வரை, 135.5 டி.எம்.சி., நீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 529 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 393 டி.எம்.சி., நீர் கூடுதலாக கிடைத்து உள்ளது.தமிழகத்தில் காவிரி நீரை சேமிக்க, மேட்டூர் அணையை தவிர, பெரிய கட்டமைப்புகள் இல்லாததால், கர்நாடகாவில் வந்த நீர், அதிகளவில் கடலில் சென்று கலந்துள்ளது. தற்போது, சேலம் மேட்டூர் அணையில், அதன் முழு கொள்ளளவான 93.4 டி.எம்.சி., நீர் உள்ளது.