52 ஆயிரம் லம்பானி குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு..!

ல்புர்கி: கர்நாடக மாநிலம் கல்புர்கியில் நேற்று லம்பானி குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி லம்பானி பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றார்.

லம்பானிகளின் பாரம்பரிய நடனத்தை கண்டு களித்தார். பின்னர் வடகர்நாடகாவில் உள்ள யாதகிரி, கல்புர்கி, ரெய்ச்சூர், பீதர், விஜயாப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லம்பானி (பஞ்சாரா) குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 5 லம்பானி குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: லம்பானி (பஞ்சாரா நாடோடி மக்கள்) சமூக வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாளாகும். இந்த நாளுக்காக லம்பானி சமூகத்தினர் நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது. அந்த போராட்டத்தின் விளைவாகவே இப்போது 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லம்பானி குடும்பங்கள் சொந்தமாக வீட்டை பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டு நாட்டு மக்கள் அடிப்படை உரிமைகளைப் பெற்ற புனிதமான ஜனவரி மாதத்தில் லம்பானி மக்களும் அடிப்படை உரிமையை பெற்றிருக்கின்றனர்.

1993ம் ஆண்டிலே லம்பானிகளுக்கு வீட்டு பட்டா வழங்குமாறு பரிந்துரை வழங்கப்பட்டது. ஆனால் அப்போது ஆட்சி செய்தவர்கள் லம்பானிகளை வாக்கு வங்கியாக பயன்படுத்தினார்களே தவிர நிலப் பட்டா வழங்கவில்லை. நான் பிறந்த குஜராத் பகுதியில் பஞ்சாரா சமூகத்தினர் ஏராளமானோர் வசிக்கின்றனர். அவர்களில் ஒருவனாகவே என்னை கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.